திருவாரூர்: பிப்.7-க்குள் இடைத்தேர்தல்

election-commiமதுரை, நவ.26:தமிழகத்தில் திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கின் முடிவை பொறுத்து அங்கும் விரைவில் தேர்தல் நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளு டன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிகளும் காலியாக உள்ளது. இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

திருவாரூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி காலமானார். அந்த தொகுதி உடனடியாக காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 7-ந் தேதியுடன் 6 மாதம் நிறைவடைகிறது.  இதே போல அதிமுக எம்எல்ஏ போஸ் மரணத்தால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.ஆனால் அந்த தொகுதியில் போஸ் போட்டியிடும் போது ஜெயலலிதா அளித்த சான்றிதழில் இருந்த கையெழுத்து அவருடையது தானா என்பது பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் இன்று மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் திருவாரூரில் 6 மாத காலத்திற்குள் அதாவது பிப்ரவரி 7-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
திருப்பரங்குன்றம் தொகுதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதன் முடிவுவை பொறுத்து அங்கு தேர்தல் நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு முடிவுக்கு வந்தால் 2 தொகுதிகளிலும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த தயார் என்றும் தேர்தல் கமிஷன் கூறியிருக்கிறது. அண்மையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அநேகமாக 20 தொகுதிகளுக்கும் பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரசத சாஹூ கூறியிருக்கிறார்.
பிப்ரவரி 7ந் தேதிக்குள் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலைமை தேர்தல் ஆணையம் கூறியிருப்பது குறித்து அவரிடம் செய்தியாளர்களிடம் கேட்டனர்.  அதற்கு பதில் அளித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி, 20 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். திருவாரூர் தொகுதியை பொறுத்தவரை காலியாகி 6 மாதம் ஆனதால் பிப்ரவரியில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதற்கு தீர்வு ஏற்பட்டால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

      

  • |
  • One thought on “திருவாரூர்: பிப்.7-க்குள் இடைத்தேர்தல்

    1. 20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிப்பது அவசியம்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *